×

திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய விதிமுறை

காதல் திருமணத்துக்கு பொருத்தம் பார்ப்பது அவசியமா?

காதல் திருமணம் செய்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்கு அடிப்படையான மனப்பொருத்தம் அட்சய ராசி பொருத்தத்தால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். ஆகையால், அட்சய ராசிப் பொருத்தமே அங்கு இருக்கும் காரணத்தால் மற்ற பொருத்தங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை.ஆனால், ஒரு சிலர், காதல் திருமணத்திற்கும் பொருத்தம் பார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பதால், அட்சய ராசிப் பொருத்தம் இல்லை என்பது வெளிப்படுவதால், தேவையற்ற சில சங்கடங்களை அறிந்து கொள்ள நேரிடும். அதுவே அவர்களுக்குள் சில தர்ம சங்கடமான சூழ்நிலைகளை உருவாக்கி விடுகிறது. திருமணப் பொருத்தம் என்பது, எல்லா நேரத்திற்கும் பொருத்தமானதாக அமைவது கிடையாது. அட்சய லக்னங்கள் மாற மாற சில கிரக சூழ்நிலைகள் நமக்கு சாதகமற்றதாக அமையும்போது, தேவையற்ற வாக்குவாதங்களும், பிரச்னைகளும், பிரிவினைகளும் கூட நேர்ந்துவிடுகிறது.

30 வயதுக்கு மேல் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டாமா?

பொதுவாக, திருமண அமைப்பு என்பது 21 வயது முதல் 30 வயது வரை இயற்கையாகவே அமைய வேண்டியது. ஏனென்றால் பாகங்களின் ஆற்றல் அதீதமாக அமையப்பெறும். ஆனால் அந்த குறிப்பிட்ட திருமண வயதைத்தாண்டிய பின், உதாரணமாக 30 வயதுக்கு மேல் திருமணம் நிகழும் போது, ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பாவக மாற்றத்தின் காரணமாக, உடலும் மனமும் மாற்றத்திற்கு ஆளாகிறது. ஆக, வயது கூடக்கூட, அனுபவங்களும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதிகமாகி விடுகிறது. அதன் பயனாக எதிர்பார்ப்புகள் தானாகவே குறைந்து விடுகிறது. ஆகையால், நமது ஜாதகத்தின் நிலையை அறிந்து, மனப் பொருத்தத்தை மட்டுமே மையமாகக் கொண்டு திருமணம் செய்து கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

பொருத்தம் பார்க்காத திருமணங்கள் வாழ்வில் வெற்றி பெறுவது எவ்வாறு?

பொருத்தம் பார்க்காத திருமணங்கள் என்பது நம் புறக் கண்களில் மட்டுமே தெரியும் வெளிச்சம் ஆகும். ஆனால், இன்னார்க்கு இன்னார் என்று, பெண்ணுடைய அட்சய லக்னமும் ஆணுடைய அட்சய லக்னமும் பொருத்தமாக அமையப்பெற்ற ஜோடிகள், எதார்த்தமாகவே திருமணத்தை அமைத்துக்கொண்டு, அதை பொருத்தம் பார்க்காத திருமணம் எனக் கூறிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையாகவே உடல், மன பொருத்தம் அதீதமாக அமையப்பெற்று, இயற்கையாகவே கிரகங்கள் திருமணத்தை நடத்தி வைத்திருக்கும். இது அவரவர்களின் கிரகஅமைப்பால் விதிபயனாக ஏற்பட்ட பூர்வ புண்ணிய பலனாகும். அவ்வாறாகவே, பொருத்தம் பார்க்காத திருமணங்கள் சில நேரங்களில், வாழ்வில் தோல்வியை சந்திப்பதும், அவரவருடைய அட்சய லக்னமும், அட்சய ராசியும் பொருத்தமில்லாததே காரணமாகும். இதுவும் பூர்வ புண்ணிய பலன்.பொருத்தம் பார்க்காத திருமணங்கள் வாழ்வில் வெற்றிபெற அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை கற்கவும். நமக்கு ஏன் இவ்வாறான வாழ்க்கைத் துணை அமைந்துள்ளது என்ற கேள்விக்கான விடை, புரிதல் உங்களுக்கு கிடைக்கும். அதை உணரும்போது, உணர்த்தப்படும்போது, உங்கள் வாழ்க்கைப் பயணம் வெற்றி பெறுவதற்கான வழியாகவும், வழிகாட்டியாகவும் அமையும்.

The post திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய விதிமுறை appeared first on Dinakaran.

Tags :
× RELATED கஷ்டங்கள் தீர நன்மைகள் கிடைக்க சாய்பாபா வழிபாடு..!!