தஞ்சை: தஞ்சை நகர பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது குறைகளை கேட்டு நிரந்தர தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை தஞ்சை எஸ்.பி. ஆஷிஸ் ராவத் தொடங்கி வைத்தார். டவுன் டி.எஸ்.பி. ராஜா தலைமை வகித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. காவல் நிலையங்களில் புகார் கொடுத்த இரு தரப்பினரையும் வரவழைத்து விசாரிக்கப்பட்டது. மொத்தம் 58 மனுக்கள் பெறப்பட்டது. 50 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று கலந்து கொள்ளாத புகார்தாரர்கள் மற்றொரு நாளில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நகரப் பகுதிக்குள் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், எஸ்எஸ்ஐகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து முகாமில் கலந்து கொண்ட மாலதி கூறுகையில், எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்னை நீண்ட காலமாக இருந்தது. இதற்கு நீதிமன்றம் மூலம் தான் தீர்வு காண வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால் நாங்கள் எங்கள் குடும்பத்துக்குள்ளேயே பேசி இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடிவெடுத்தோம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த முகாமில் சொத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது என்றார்.
ஜெபமாலைபுரம் இலஞ்சியம் லாரன்ஸ்: எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கும், எனது கணவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது கணவர் மீது நான் புகார் கொடுத்தேன். அப்போது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் நேற்று நடைபெற்ற முகாமில் நானும் என் கணவரும் சேர்ந்து வாழ்வதாக முடிவு செய்தோம். குறிப்பாக போலீசார் எனக்கு நல்ல அறிவுரைகளை கூறினர். எனது கணவருக்கு வாழ்க்கைப் பற்றி எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினர். இதனை நாங்கள் இருவரும் ஏற்றுக் கொண்டு புகாரை வாபஸ் வாங்கினேன். இந்த முகாம் மூலம் நடத்தப்பட்ட விசாரணை எனக்கு மீண்டும் ஒரு புது வாழ்வை தந்துள்ளது என்றார்.
The post காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட 50 புகார் மனுக்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சிறப்பு முகாம் நடத்தி போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.