×

கருணாபுரத்தில் கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கில் 200 பேர் விஷச்சாராயம் குடித்தது அம்பலம் : 4 வழக்குக்களை பதிவு செய்தது சிபிசிஐடி!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் பல பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆய்வு செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் நடந்த விஷச் சாராய மரணங்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, கருணாபுரத்தில் நேற்று முன்தினம் மரணமடைந்த கூலித் தொழிலாளி இறுதிச்சடங்கில் பங்கேற்ற சுமார் 200 பேர் சாராயம் குடித்துள்ளனர். நேற்று முன்தினம் சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு அன்றைய தினம் இரவே உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று காலை சிலர் உயிரிழந்ததை அடுத்து விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சென்றுள்ளனர். இதுவரை 127 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதிதலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிசிஐடி. மரணம் விளைவித்தல், விஷத்தையோ அல்லது மயக்கமடையச் செய்யும் போதைப்பொருளையோ விற்றல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு பிறகு கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

The post கருணாபுரத்தில் கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கில் 200 பேர் விஷச்சாராயம் குடித்தது அம்பலம் : 4 வழக்குக்களை பதிவு செய்தது சிபிசிஐடி!! appeared first on Dinakaran.

Tags : Karunapuram Exposed ,CBCID ,Kallakurichi ,Vishcharaya ,Karunapuram ,Kallakurichi district ,Kalakurichi Government Hospital ,Viluppuram Government Hospital ,Salem Government Hospital ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...