×

தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சி தொடக்கம்: மேயர் பிரியா கையேட்டை வெளியிட்டார்

சென்னை, ஜூன் 20: தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற துறை மாவட்ட நிலை அலுவலர்களுக்கான புரிந்துணர்வு பயிற்சியை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற துறை மாவட்ட நிலை அலுவலர்களுக்கான புரிந்துணர்வு பயிற்சியை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு வறுமையின் மீதான இறுதி தாக்குதல் என்ற நோக்கத்துடன் நிதிநிலை அறிக்கை 2024-25ல் நிதித்துறை அமைச்சர் தாயுமானவர் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்து கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான தாயுமானவர் திட்டத்தின் முழு நோக்கமே ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அரசின் திட்டங்களின் மூலம் தேவையான உதவிகளைச் செய்து, சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படைய செய்வதே ஆகும்.

மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. முதற்கட்டமாக நகர்ப்பகுதிகளில் ஏழை மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வசிப்பிடங்களைக் கண்டறிந்து அவர்களின் குடும்பங்களை வரிசைப்படுத்தி, ஏழை மற்றும் விளம்பு நிலையில் உள்ள மக்களை அடையாளம் காணக்கூடிய ஒரு செயல் முறையாகும். நேற்று வெளியிடப்பட்ட பயிற்சிக் கையேட்டில் ஏழை மக்களின் வசிப்பிடங்களை அடையாளம் காணுவதற்கான குழுவினை அமைத்தல், புள்ளி விவர கணக்கெடுப்பு குழு அமைத்தல் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளை ஏற்படுத்துதல், செயல்முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நகர சபைக் கூட்டத்தில் திட்டத்தினை அறிமுகம் செய்தல் போன்ற ஒவ்வொரு குழுக்களுக்கான பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களின் வசிப்பிடங்களை அடையாளம் காணும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர், நகர்ப்புற சுகாதார ஆய்வாளர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்த அலுவலர், சமுதாய அமைப்பாளர்கள், சுய உதவிக் குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர், சமுதாய வளப்பயிற்றுநர், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர். முன்னோடி பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கணக்கெடுப்பு முடிவுற்ற பின்னர் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திட்டத்தினை விரிவுபடுத்திடவும், அனைத்து நலிவுற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

தேனாம்பேட்டையில் முதல் கணக்கெடுப்பு
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு-111க்குட்பட்ட அழகிரி நகர், வார்டு-110க்குட்பட்ட புஷ்பா நகர்-காமராஜபுரம் விரிவாக்கம், வார்டு-109க் குட்பட்ட கிழக்கு நமச்சிவாயபுரம், திருவொற்றியூர் மண்டலத்தில் வார்டு-7க்குட்பட்ட பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் முன்மாதிரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சி தொடக்கம்: மேயர் பிரியா கையேட்டை வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : MAAYUMANAVAR PROJECT ,MAYOR ,PRIYA ,CHENNAI ,PRIYA YESTERDAY ,Chennai Municipality ,Tamil Nadu ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...