×

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் மான்கள் : சுற்றுலா தலமாக மேம்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூன் 20: காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில் சுற்றித்திரியும் மான்களை பராமரித்து சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏரிகளின் மாவட்டம் என ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு மாவட்டம் முழுவதும் ஏரிகள் அதிகளவில் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் இருந்து சின்ன காஞ்சிபுரம் செட்டி தெருவிற்கு செல்லும் வழியில் அல்லாபாத் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன்‌ திருக்காலிமேடு, திருவீதிபள்ளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

மேலும், இந்த ஏரி சுற்றுவட்டார பகுதிகளான திருக்காலிமேடு, நேதாஜி நகர், திருவள்ளுவர் தெரு, கேஎம்வி நகர், திருவீதி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது. நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் தூர்ந்து போனதால், ஏரிக்கரையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. நகர விரிவாக்கத்தால் அல்லாபாத் ஏரியின் பாசன விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறியன. இந்த குடியிருப்பு கழிவுகள் அனைத்தும் இந்த ஏரியிலேயே வந்து சேர்ந்தது. இதனால், அல்லாபாத் ஏரி அப்பகுதி மக்களின் கழிவுகளை கொட்டும் இடமாக மாறியது. மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி மாயமாகி உள்ளது. இதனால், தற்போது ஏரிக்கு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரி முழுவதும் காடுபோல் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லாதது மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் சுற்றுவட்டார பகுதிகளின் மிகப்பெரிய நீராதாரமான அல்லாபாத் ஏரி வறண்டு கிடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த பெருமழையில் வடிகால் கால்வாய்கள் இல்லாததால், இப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு வழிதவறி வந்த 2 மான்கள் அல்லாபாத் ஏரியில் சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் முதன்முதலாக பார்த்துள்ளனர்.

அவை தற்போது இனபெருக்கத்தின் காரணமாக தற்போது சுமார் 25க்கும் மேற்பட்ட மான்கள் ஏரி பகுதியில் உலா வருகின்றன. எனவே, இப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘அல்லாபாத் ஏரியால் தற்போது விவசாயம் எதுவும் நடைபெறவில்லை. அதனால், ஏரி சீரமைப்பதற்கு யாருக்கும் ஆர்வம் இல்லை. ஆனால், மழைக்காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும். ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு வந்த மான்கள் தற்போது இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனை அவ்வப்போது நாங்கள் பார்க்கின்றோம்’ என்றனர்.

வனத்துறை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்
காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி பகுதியில் 2016ம் ஆண்டு காணப்பட்ட மான்கள் தற்போது இனபெருக்கத்தால் சுமார் 25க்கும் மேற்பட்ட மான்கள் ஏரியில் உலா வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த ஏரியில் மான்களுக்கு தகுந்த உணவுகளை வழங்கி அவற்றை பராமரித்தால் வண்டலூர் உயிரியில் பூங்கா போன்று இப்பகுதியில் மான்கள் பூங்கா அமைக்கலாம். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் வந்து ஆய்வு நடத்தி இப்பகுதியை மான்கள் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மான்களை காண கூடும் கூட்டம்
அல்லாபாத் ஏரி பகுதியில் மான் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், இப்பகுதியில் வண்டலூர் பூங்கா, வேடந்தாங்கல் சரணாலயம் போல் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அப்பகுதியை சேர்ந்த சுற்று வட்டார மக்களும் அங்கு படை எடுத்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் கூட்டம் தினந்தோறும் காணப்படுகிறது. இதனால், அவர்கள் இப்பகுதியை மான்கள் வாழும் பகுதியாக அறிவித்து முறையாக அவற்றை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் மான்கள் : சுற்றுலா தலமாக மேம்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Allahabad Lake ,Allabad Lake ,Tamil Nadu ,Kanchipuram Deer ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...