×

மாமல்லபுரம் கோவளத்தில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

மாமல்லபுரம், ஜூன் 20: மாமல்லபுரத்தில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழகத்தில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 57 கி.மீ. நீளம் உள்ள கடற்கரை பகுதியில் கானத்தூர் ரெட்டி குப்பம் தொடங்கி, கோட்டைக்காடு குப்பம் வரை 33 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாமல்லபுரம் மீனவர் குப்பம் கடல் பகுதியில் நேற்று தொடங்கியது.

மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முன்னிலையில், கடலோர காவல் படை எஸ்ஐ ராஜேந்திரம் மற்றும் 5 காவலர்கள் கொண்ட குழுவினர் அதிநவீன ரோந்து படகுகள் மற்றும் தொலைநோக்கு கருவிகள் மூலமாக கடலில் நேற்று சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில், சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும், கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சந்தேகத்திற்கு இடமான வகையில் கப்பல்கள், படகுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் உடனடியாக கடலோர காவல் படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

திருப்போரூர்: வருடந்தோறும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும், முக்கிய நகரங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதன்படி, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் நடத்திய சாகர் கவாச் 2024 பாதுகாப்பு ஒத்திகை கடற்கரையோர பகுதிகளில் நடந்தது. இதில், கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் சென்னை – புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிரவாதிகள் போர்வையில் யாராவது ஊடுருவி உள்ளார்களா? என வாகனங்களின் கதவுகளை திறந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனங்களில் பயணித்தவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி, சரிபார்த்த பிறகே குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதேபோல், கோவளம் மீனவர் பகுதியில் உள்ள கடலில் படகில் தீவிரவாதிகள் யாராவது ஊடுருவி உள்ளார்களா? என ரப்பர் படகில் சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மீனவர்கள் வந்த படகுகளையும் சோதனையிட்டனர். இச்சோதனையில் யாரும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

The post மாமல்லபுரம் கோவளத்தில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Sagar Gavach Safety ,Mamallapuram Kovalam ,Mamallapuram ,Sagar Gavach ,Sagar Kavach security drill ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...