×

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. நாடு முழுவதும் நடப்பாண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ (தேசிய தகுதி நுழைவுத் தேர்வு) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது. இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் 0.001% அலட்சியம் நடந்திருந்தால் கூட அதனையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியிருப்பதாவது: பாஜ ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிவை தடுக்க சட்டமியற்றப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விசயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காக்கிறது. எனவே நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் நாளை (ஜூன் 21) நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான நீதியை கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இதில் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்பார்கள். ஏனெனில் ஜூன் 4ல் வெளியான நீட் தேர்வு முடிவில் சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன. மேலும் கருணை மதிப்பெண்களை வழங்குவது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது. தொழில்நுட்பக் கோளாறுகள், சில தேர்வு மையங்களில் முறைகேடு, நியாயமற்ற வழிமுறைகளால் நீட் தேர்வு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார், குஜராத் , அரியானாவில் நடத்தப்பட்ட நீட் முறைகேடு தொடர்பான கைது நடவடிக்கைகளில் இருந்து பார்க்கும் போது நீட் தேர்வில் நடந்த ஊழல் அப்பட்டமாக தெரிகிறது. இந்த ஊழல் பாஜ ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உச்ச நீதிமன்றமும் எடுத்துக்காட்டியது. எனவே அலட்சியத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற முறைகேடுகள், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை குலைத்து, எண்ணற்ற அர்ப்பணிப்புள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. நீட் கேள்வித்தாள் வெளியானதற்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,NEET ,New Delhi ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...