×

பாக்கெட் சாராயம் விற்ற வியாபாரி கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 16 பேர் பலியாகினர். இதுதொடர்பாக பாக்கெட் சாராயம் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன்(29), சுரேஷ்(46), சேகர்(55), பன்ருட்டி அடுத்த ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(39), கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவா(32), பெரியசாமி(40), சுப்ரமணியன்(56), பரமசிவம்(56), குரு(44). இவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி கோட்டைமேடு, கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

இதில் திடீரென நேற்று ஒரு சிலருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பிரவீன், சேகர் ஆகியோரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மேலும் சுரேஷ் என்பவர் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மற்றொரு சுரேஷ் மூட்டை தூக்கும் பணியில் இருந்தபோது வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார், எஸ்பி சமய்சிங் மீனா, வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ, மலையரசன் எம்பி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) நேரு, கண்காணிப்பாளர் பழமலை மற்றும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி (62), மணி (58), இந்திரா (48) உள்பட 19 பேர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிலரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணி என்பவர் ஜிப்மர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். மேலும் முண்டியம்பாக்கம் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் மணிகண்டன் (35) என்பவர் நேற்றிரவு இறந்தார். இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாதவச்சேரியைச் சேர்ந்த நாராயணசாமி (65), ராமு(50), சுப்பிரமணியன்(55) ஆகியோரும் பலியானார்கள்.

மேலும் கள்ளச்சாராயம் குடித்த கருணாபுரம் தனகோடி (55) என்ற பெண்ணும், கரியப்பா நகர் ஆறுமுகம் (75) என்ற முதியவரும் வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்தனர். இந்நிலையில் நேற்றிரவு மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஷ சாராயம் குடித்து 16 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாக்கெட் சாராயம் விற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ் (45) என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவரை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக தாமோதரன், விஜயா ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post பாக்கெட் சாராயம் விற்ற வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Praveen ,Suresh ,Shekhar ,Kallakurichi Karunapuram ,Panruti ,Antikuppam ,
× RELATED கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 3 பேர்...