×

நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு என்பது ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும், மட்டுமே உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது, வினாத் தாள்களை திருடுவது, விடைத்தாள்களை மாற்றி வைப்பது, மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என இத் தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால்தான் திமுக நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவ்வளவு மாணவர்கள் முதலிடம் பிடித்தது, எவ்வாறு சாத்தியமாகும் என்றால், வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளி வருவது, பணம் பெற்றுக் கொண்டு விடைகளை பகிர்வது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இத்தேர்வு முறையே மோசடி என்று உறுதி செய்கிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். கழக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்ற நாள் முதலே உதயநிதி ஸ்டாலின், இந்த நீட் தேர்வை எதிர்த்தும், அதனை தமிழ்நாட்டிலிருந்து நீக்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமைகளையும், அவர்கள் இழக்கும் வாய்ப்பை பெற்றுத் தரவும் போராடி வருகிறார்.

அவரது வழிகாட்டுதலோடு, கழக இளைஞர் அணியுடன் மாணவர் அணியும் இணைந்து மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் உண்ணாநிலை போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 24ம் தேதி அன்று காலை 9 மணியளவில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,DMK Student Union ,Ehilarasan ,Union Government ,NEET ,Dinakaran ,
× RELATED கோவையில் நடைபெறும்...