×

சண்டக்கோழி-2 படத்திற்கான வெளியீட்டு விவகாரம்; லைகா நிறுவனத்திடம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கேட்டு நடிகர் விஷால் மனு

சென்னை: நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை நான் செலுத்தி உள்ளேன். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தருமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதனிடையே, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், ஜி.எஸ்.டி. ஒப்பந்தத்தின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, தான் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடிகர் விஷால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தின் அசல் தங்களிடம் இல்லை என்றார். இதையடுத்து, லைகா நிறுவனத்தின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

The post சண்டக்கோழி-2 படத்திற்கான வெளியீட்டு விவகாரம்; லைகா நிறுவனத்திடம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கேட்டு நடிகர் விஷால் மனு appeared first on Dinakaran.

Tags : Vishal Manu ,Leica ,CHENNAI ,Madras High Court ,Vishal ,Lyca ,Sandakoshi ,2 ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...