×

தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக மருத்துவர்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்: பொது சுகாதாரதுறை அறிவுரை

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை சார்பில் மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் 24*7 எந்த நேரத்திலும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும், வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் தேவையான மருந்துகள், போதுமான அளவு பூச்சிக்கொல்லி மருந்து வைத்து இருக்க வேண்டும், ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் அவசரகால தடுப்பூசி, படுக்கைகள் உள்ளிட்டவை தட்டுப்பாடு இல்லாமல் தயார் நிலையில் வேண்டும். மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் போதுமான அளவு எரிபொருள் நிரப்பி இருக்க வேண்டும்.

மழைக்கு பிறகு குடிநீர் சுத்தமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், தேவையான இடங்களில் கொசு உருவாகாமல் இருக்க புகை மருந்து அடிக்க வேண்டும், குடிநீர் கழிவு நீருடன் கலக்காமல் உள்ளாட்சி அமைப்புகள் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும். காய்ச்சல், தோல் வியாதி என வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும், பாம்பு உள்ளிட்ட விஷம் உள்ள விலங்கு கடிவுடன் வருபவர்களுக்கு முதலுதவி செய்து, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

The post தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக மருத்துவர்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்: பொது சுகாதாரதுறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...