×

ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்; பிரியங்கா போட்டியிடுவதை வாரிசு அரசியல் என்பதா? எல்.முருகனுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஏழைகளுக்கு பண உதவி வழங்கி சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாமை செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் சிவராஜசேகர், டில்லி பாபு உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஏற்பாட்டில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், அயன்பாக்ஸ், புடவை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில், மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்பி ஜெ.எம்.ஆரூண், விஜய் வசந்த் எம்பி, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், அசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, வக்கீல் செல்வம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், இலக்கிய அணி தலைவர் புத்தன், எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன் மற்றும் நிர்வாகிகள் மயிலை தரணி, எஸ்.கே.நவாஸ், சூளை ராஜேந்திரன், மலையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. இது குடும்ப அரசியல் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இந்திரா காந்தியின் குடும்பத்தினர் குறித்து பேச யாருக்கும் தகுதி கிடையாது. இந்திரா காந்தியின் குடும்பம் தேசத்தின் குடும்பம். அவர்கள்தான் இந்தியாவின் முகம். அவரது குடும்பத்தினரை வாரிசு அரசியல் என்று சொன்னால் அது முட்டாள்தனம்’’ என்றார். ராகுல் காந்தி பிறந்த நாளை ஒட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன் ஏற்பாட்டில் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

The post ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்; பிரியங்கா போட்டியிடுவதை வாரிசு அரசியல் என்பதா? எல்.முருகனுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Priyanka ,L. Murugan ,CHENNAI ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,Sathyamurthi Bhavan ,L.Murugan ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...