×

அரசு நிதியுதவி பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரிப் பணியில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணி வழங்க அனுமதித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் 5018 நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1496 நடுநிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களால் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மொத்த முள்ள 6514 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருடன் உபரியாக 5845 பேர் உள்ளன என்றும், நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்கள் 1340 உள்ளன என்றும் தொடக்க கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பை தவிர்க்கும் வகையில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி வழங்குவது குறித்து உரிய ஆணை வழங்க வேண்டும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் கருத்துருவை கவனமாக பரிசீலித்த அரசு, அதை ஏற்று அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயத்தின்படி உபரியாக பணியாற்றி வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி வழங்க அனுமதித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு ஆணையிடுகிறது.

The post அரசு நிதியுதவி பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அனுமதி: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Principal Secretary of School Education ,Kumaragurubaran ,Department of Elementary Education ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...