×

சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஸ்ரீநகர் பயணம்: நகர் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஸ்ரீநகர்: சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்கிறார். அதனால் நகரம் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஜூன் 20) ஸ்ரீநகர் செல்கிறார். பின்னர் நாளை மறுநாள் ஸ்ரீநகர் தால் ஏரிப் பகுதியில் நடக்கும் யோகா நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். அதையொட்டி, ஜம்மு – காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணத்தை முன்னிட்டு, ஸ்ரீநகர் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘நகர் நகரம் தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் ட்ரோன்கள், குவாட்காப்டர்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது. சிவப்பு மண்டல பகுதிகளில் அனைத்து வகையான அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாயத்து தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பஞ்சாயத்து தலைவர்கள் யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், சமுதாயகூடங்களில் யோகா வகுப்புகளை நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் பகுதியில் பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச யோகாசன நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஸ்ரீநகர் பயணம்: நகர் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Srinagar ,Nagar ,Modi ,International Yoga Show ,International Yoga Day ,Dinakaran ,
× RELATED சர்வதேச யோகா தினம்.. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு..!!