×

சென்னையில் கூடிய பாஜக மையக்குழு கூட்டம் அண்ணாமலை மீது தமிழிசை சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு: மூத்த தலைவர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்ததாக தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் பாஜக மையக்குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை என அனைத்து தொகுதிகளையும் வாரி சுருட்டி பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த கூட்டணியை தவிர்த்து அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. இது அரசியல் களத்தில் பேசும் பொருளாகியிருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் ‘சில’ பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழிசை- அண்ணாமலைக்கும் இடையே மோதல் வெடித்தது.

குறிப்பாக கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இதனால் பாஜகவில் இரு அணிகள் உருவாகியிருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் வசை பாடியது பாஜ தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது.

இதனால் டெல்லி சென்ற அண்ணாமலையை, அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் விழா மேடையில் பகிரங்கமாக தமிழிசையை அழைத்து அமித்ஷா கையை காட்டி கண்டித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை- தமிழிசை தரப்பு இடையேயான மோதல் குறித்து அப்போது அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.

சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிக அளவில் கவனத்தை பெற்ற நிலையில், அடுத்த நாள் அண்ணாமலை தமிழிசையை சந்தித்து, அக்கா- தம்பி என ட்வீட் போட்டனர். இந்த சூழ்நிலையில், அண்ணாமலையின் நாகரீகமில்லாத பேச்சு காரணமாகத் தான் தமிழகத்தில் பாஜக மண்ணை கவ்வியது என பாஜகவினரே விமர்ச்சித்து வருவது பாஜ தலைமைக்கு கூடுதல் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கூடியது. இந்த கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் சரிந்தது, கேரளாவில் ஒரு எம்பி தொகுதி பெற்ற நிலையில் தமிழகத்தில் படுதோல்வியை சந்திக்க காரணம், கட்சியின் எதிர்கால திட்டங்கள், கட்சியில் இருக்கும் உட்கட்சி மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் தோல்வி குறித்து மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்து கூறியுள்ளனர்.

அப்போது, தமிழிசை எழுந்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது சராமாரியாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சிக்குள் இருக்கும் தலைவர்களை விமர்சிப்பது எப்படி நியாயம் ஆகும். தரம் தாழ்ந்து விமர்சிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்தது இல்லை. இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. வலுவான கூட்டணிக்கும் முயற்சிக்காமல், யாருடைய ஆலோசனையையும் அண்ணாமலை கேட்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தாக கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனால் தான் தமிழகத்தில் பாஜக படு தோல்வியை சந்திக்க காரணம் என்றும், அண்ணாமலை தான், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அடுத்தடுத்த புகார்களை கூறியதும், அதற்கு சில மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து அண்ணாமலை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தின் முடிவில் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கும் முதல் பாஜக கூட்டம் என்பதால் இந்த கூட்டம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் கூடிய பாஜக மையக்குழு கூட்டம் அண்ணாமலை மீது தமிழிசை சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு: மூத்த தலைவர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Annamalai ,Tamil Nadu ,Saramari ,Annamala ,Dimuka Coalition ,Panjaka ,group ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது