×

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடுக: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுக்கான வசதியை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு செய்து தரக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரையில் அவர்களை வெளியேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளான இலவச வீட்டுமனைப்பட்டா, குழந்தைகளுக்கு தேவையான கல்வி வசதி, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி போன்றவற்றை நிறைவேற்றித் தர தமிழக அரசு முன்வர வேண்டும். ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அறிவுறுத்தலை பின்பற்றி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதோடு, அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடுக: டிடிவி தினகரன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : mancholai ,DTV ,Dhinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,Nellai ,High Court Madurai ,
× RELATED மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ஐகோர்ட் கிளையில் மேலும் ஒரு வழக்கு