×

கோடை விடுமுறை முடிந்து இன்று கல்லூரிகள் திறப்பு; ரூட் தல பிரச்னையை தடுக்க கல்லூரிகள் முன்பு போலீஸ் குவிப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ரூட் தல பிரச்னையை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகள் முன்பும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து கலைக்கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது. அதேநேரம் முதல் நாள் என்பதால் பச்சையப்பன், மாநில கல்லூரி, நந்தனம், புதுக்கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்சனை நடைபெறும் என்றும், இதனால் கல்லூரி மாணவர்களிடையே மோதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை உறுதி செய்யும் வகையில் இன்று காலை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 5 மாநில கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் மோதியதில் ஈடுபட்ட திட்டமிட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூட் தல பிரச்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர்சாலை, அண்ணாசாலைகளில் மோதலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜர்சாலையில் உள்ள மாநில கல்லூரி, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி, நந்தனம் பகுதியில் உள்ள நந்தனம் கலைக்கல்லூரி என சென்னை முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் முன்பு அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரூட் தல பிரச்னையில் ஏற்கனவே சிக்கிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை தீவிர சோதனை செய்த பிறகே கல்லூரிக்குள் போலீசார் அனுமதித்தனர். தடையை மீறி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post கோடை விடுமுறை முடிந்து இன்று கல்லூரிகள் திறப்பு; ரூட் தல பிரச்னையை தடுக்க கல்லூரிகள் முன்பு போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...