வேலூர், ஜூன் 19: ஆந்திராவில் இருந்து வேலூருக்கு பைக்கில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைப்பற்றி 4 பேரை கைது செய்தனர். வேலூர் எஸ்பி மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் காட்பாடி அடுத்த உள்ளிப்புதூர் ரோட்டில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 8.30 மணியளவில் அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் 2 பைக்குகளிலும் வந்தவர்களிடம் இருந்த பைகளில் சோதனையிட்டபோது, அதில் தலா 2.5 கிலோ வீதம் மொத்தம் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ₹50 ஆயிரமாகும்.
இதையடுத்து பைக்குகளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 4 பேரையும் பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள், வேலூர் அடுத்த பொய்கை சத்தியமங்கலத்தை சேர்ந்த நெடுஞ்செழியன்(24), பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி கழனிப்பாக்கத்தை சேர்ந்த விஜய்(33), வேப்பங்கால் ராமாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(25), திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்த ரிஷிகுமார்(20) என்பது தெரிய வந்தது. இவர்கள் கஞ்சாவை ஆந்திர மாநிலம் குடிபாலா அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து வாங்கி வந்து வேலூர், திருப்பூர், கோவை என பல்வேறு இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆந்திராவில் இருந்து வேலூருக்கு கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் பைக்குகளுடன் 4 பேர் கைது appeared first on Dinakaran.