×

வாங்கிய கடனை திருப்பி தராததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் கடத்தல்? 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

சென்னை: வாங்கிய கடனை திருப்பி தராததால் மதுரவாயலில் பட்டப்பகலில் 10 பேர் கொண்ட கும்பல் தொழிலதிபரை காரில் கடத்தி சென்றது. ஆனால் அவர் நேற்று இரவு வீடு திரும்பினார். யாரும் கடத்தவில்லை என்று போலீசில் தெரிவித்துள்ளதால் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன் (30). இவர் இவரது உறவினரான மதுரவாயலைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மதியம் மதுரவாயலில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இருவரும் வெளியே வந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் ஹர்ஷவர்த்தனை காரில் கடத்திக் கொண்டு சென்றனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஹர்ஷவர்த்தன் தொழில் நஷ்டம் காரணமாக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து அவர் சென்னையில் மீனாட்சி சுந்தரம் வீட்டில் வந்து கடந்த இரண்டு மாதங்களாக தங்கி உள்ளார். இதற்கிடையே, சம்பவதன்று ஓட்டலில் சாப்பிட வந்தபோது ஹர்ஷவர்த்தனை கடத்திச் சென்றுள்ளனர். இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த ரகு மற்றும் 9 பேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ஹர்ஷவர்த்தன் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் அந்த ஆத்திரத்தில் ஹர்ஷவர்த்தனை அவர்கள் கடத்திச் சென்றிருப்பதுடன் மீனாட்சி சுந்தரத்தையும் அவர்கள் மிரட்டி விட்டு சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதுடன் ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், சொந்த ஊருக்குத்தான் கூட்டிச் சென்றது தெரியவந்ததால், அவரை பிடித்துச் சென்றவர்களே அனுப்பி வைத்தனர். இதனால் தூத்துக்குடியில் இருந்து அவர் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். அழைத்துச் சென்றவர்கள் நண்பர்கள்தான். யாரும் கடத்தவில்லை என்றார். ஆனாலும் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றால், அழைத்துச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*ஹர்ஷவர்த்தன் தொழில் நஷ்டம் காரணமாக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

The post வாங்கிய கடனை திருப்பி தராததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் கடத்தல்? 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhatapagal ,Madurawayal ,Dinakaran ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...