×

நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை

நாமக்கல், ஜூன் 19: நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானிய விலையில் நிலக்கடலை விதைகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது தொடர் மழையால், நிலக்கடலை செடியை வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. நிலக்கடலையில் ஒருவகை பூஞ்சாணம் தாக்குவதால், வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் 60 முதல் 100 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். மண் செடி சருகுகளில் பூஞ்சாணத்தின் வித்து வெகு நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும்.பாசன நீர், கால்நடைகள், மனிதர்கள் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். மண் மீது உள்ள பயிர்கழிவை ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்யலாம். இல்லையெனில் 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் என்ற அளவில் பூஞ்சாண கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். ஹெக்டேருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 முதல் 5 கிலோ அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம். ஹெக்டேருக்கு ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் வேர் பகுதி நனையும்படி, ஊற்றி வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,Assistant Director of Agriculture ( ,P) Mohan ,Chitrai ,Vaikasi ,Namakkal District Integrated Agriculture Extension Center ,
× RELATED டூவீலரில் படுத்துக்கொண்டு சாகசம் செய்தவருக்கு அபராதம்