×

நாய் கடித்த சிறுவனிடம் நலம் விசாரிப்பு; ரேபிஸ் பாதிப்புள்ளதா என ஆய்வு மாடுகளை வளர்க்க மாநகராட்சி சார்பில் மாட்டு தொழுவம் அமைக்க நடவடிக்கை: மேயர் பிரியா பேட்டி

சென்னை: நாய் கடித்த சிறுவனிடம் மேயர் பிரியா நலம் விசாரித்தார். அப்போது, அந்த நாய்க்கு ரேபிஸ் பாதிப்புள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது என்றும், மாடுகளை வளர்க்க மாநகராட்சி சார்பில் மாட்டுத் தொழுவம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் பிரியா கூறினார். மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் தெருநாய் கடித்ததினால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுவனை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் அச்சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மயிலாப்பூர் பகுதியில் சாய்சரண் என்ற 6 வயது சிறுவன் தெரு நாய்க்கு பிஸ்கெட் கொடுக்க சென்றபோது, அச்சிறுவனை நாய் கடித்துள்ளது. அந்தச் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவன் நல்ல நிலையில் உள்ளார். மேலும், சிறுவனை கடித்த நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு உள்ளதா என மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கும் போதும், வீட்டின் அருகில் வைத்துக் கொள்ளும் போதும் தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளை தனியாக விடக்கூடாது.

தெருநாய்களைப் பிடித்து அவற்றிற்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியபின், அவற்றை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்ற சட்ட விதியினைப் பின்பற்றி சென்னை மாநகராட்சி செயல்பட வேண்டியுள்ளது. பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ள உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களுக்கான கணக்கெடுப்புப் பணியானது 2018ம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது 2024ம் ஆண்டு இந்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தப் பணி முடிவுறும். வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கான உரிமத்தினை மாநகராட்சியின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதுவரை செல்லப் பிராணிகளுக்கான உரிமம் 5000க்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாத உரிமையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு உரிய உரிமத்தினைப் பெற்றிட வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் மாடுகளுக்கு உணவு வழங்கவும், அவை ஓய்வெடுக்கவும் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். ஆனால் தற்போது மாடுகளை வளர்ப்பவர்கள் அதற்கான இடம் ஒதுக்காமல் மாடுகளை வளர்க்கின்றனர். மேலும், வெளியில் விடும் போதும் உரிமையாளர்கள் உடன் செல்வதில்லை. எனவே, மாடுகளை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை வெளியே விடும்போது தனியே விடாமல் உடன் செல்ல வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை வெளியில் தனியாக விட்டால் மாநகராட்சியின் சார்பில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக பிடிபடும் மாட்டிற்கு ரூ.5000 எனவும், 2வது முறையாக அதே மாடு பிடிபட்டால் ரூ.10,000ம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் மாட்டின் உரிமையாளர்கள் மெத்தனமாக தங்களின் மாடுகளை வெளியே விடுகின்றனர். மாநகராட்சி நிதிநிலை அறிவிப்பின்படி, மாடுகளை வளர்ப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு மாட்டுத் தொழுவம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ரூ.43லட்சம் அபராதம் வசூல்
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,‘‘சென்னையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து இந்த ஆண்டு இதுவரை ரூ.43.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1,117 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விடாமல், மாட்டு தொழுகைகளில் மட்டுமே பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

The post நாய் கடித்த சிறுவனிடம் நலம் விசாரிப்பு; ரேபிஸ் பாதிப்புள்ளதா என ஆய்வு மாடுகளை வளர்க்க மாநகராட்சி சார்பில் மாட்டு தொழுவம் அமைக்க நடவடிக்கை: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mayor Priya Petty ,Chennai ,Mayor Priya ,Mayor ,Priya ,Mayor Priya Patti ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பணிபுரியும்...