சென்னை: வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து, மதுபோதையில் பெசன்ட் நகர் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பெயின்டர் மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய ஆந்திர மாநில எம்பி மகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் மதுபோதையில் பெசன்ட் நகர் காலாக்ஷேத்ரா காலனி, டைகர் வரதாச்சாரி 1வது குறுக்கு தெரு நடைபா தையில் படுத்து தூங்கியுள்ளார்.
போதையில் நடைபாதையில் இருந்து உருண்டு, சாலையில் விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். காரில் வந்த 2 பெண்கள் காரை நிறுத்தாமல் வேகமாக தப்பி சென்றனர். இதனைக்கண்ட பொதுமக்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர், விபத்து ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற பெண்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், விபத்தில் பலியான சூர்யா வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து மது போதையில் நடைபாதையில் தூங்கியதும் தெரிய வந்தது. இந்நிலையில், சாஸ்திரி நகர் காவல் நிலையம் வந்த சூர்யாவின் உறவினர்கள் விபத்து நடந்து 10 மணி நேரத்தை கடந்த நிலையில், சிசிடிவி பதிவுகளில் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் தப்பிய பெண்களை ஏன் கைது செய்யவில்லை என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், பெசன்ட் நகரை சேர்ந்த பீடா மாதுரி (32) என்பவர் காரை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி பீடா மஸ்தான் ராவின் மகள் என தெரியவந்தது. பெசன்ட் நகரில் வசித்து வரும் பீடா மாதிரி புதுச்சேரியில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் காரில் வந்த மற்றொரு பெண் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெசன்ட் நகரில் பரபரப்பு ஆந்திர எம்.பி. மகள் ஓட்டிச் சென்ற கார் ஏறி பிளாட்பாரத்தில் தூங்கிய வாலிபர் பலி: வீட்டில் கோபித்துக்கொண்டுவந்து சாலையோரம் தூங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம் appeared first on Dinakaran.