×

தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தல்

பெங்களூரு: நீட் தேர்வில் கர்நாடக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதால், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் வழிமுறையை கர்நாடக மாநிலத்திலும் பின்பற்ற ஆலோசித்து வருவதாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு தருவதாகவும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து பெங்களூரு விதானசவுதாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘மருத்துவ கல்வியில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் இவ்வாண்டு அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளை கடந்த பத்து நாட்களுக்கு முன்பே எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பகிரங்கமாக அம்பலபடுத்தினர்.

இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கும் நியாயம் வழங்க வேண்டும். நீட் தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், மாநிலங்களுக்கு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது என்பதில் மாற்று கருத்தில்லை. இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. நீட் தேர்வு விஷயத்தில் நமது மாநில மாணவ, மாணவிகளுக்கு அநீதி ஏற்படாமல் தவிர்க்க தமிழ்நாட்டில் பின்பற்றுவது போல், மாற்று தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

The post தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Karnataka ,Deputy Chief Minister ,TK Sivakumar ,Bengaluru ,Deputy Principal ,D.K.Sivakumar ,Tamil Nadu government ,NEET ,Tamil Nadu ,TK Shivakumar ,Dinakaran ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...