×

டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள எல்ஐசியின் சொத்துக்களை விற்று ரூ.60,000 கோடி திரட்ட மோடி அரசு திட்டம்? பரபரப்பு தகவல்கள்

மும்பை: மும்பை, டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் எல்ஐசி நிறுவனத்துக்கு உள்ள அசையா சொத்துக்களை விற்று ரூ.60,000 கோடி வரை திரட்ட பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவது, தனியாருக்கு சொத்துக்களை விற்பது ஆகியவற்றில் முனைப்புக் காட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கண்ட திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், ஒன்றிய அரசு இதனை கைவிடவில்லை.

இந்நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் சொத்துக்களை விற்று ரூ.60,000 கோடி வரை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிதி திரட்ட உள்ளதாக பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எல்ஐசி நிறுவனத்துக்கு மெட்ரோ நகரங்கள் உட்பட நாட்டின் பிரதான இடங்களில் சொத்துக்கள் உள்ளன. டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஜீவன் பார்தி கட்டிடம், கொல்கத்தாவில் சித்தரஞ்சன் அவென்யூ, மும்பையில் ஆசியாட்டிக் சொசைட்டி மற்றும் அக்பர்ராலி ஆகிய இடங்களில் கட்டிடங்கள் உள்ளன. முதல் கட்டமாக இந்த மூன்று சொத்துக்களையும் விற்று நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேச்சு நடந்து வருகிறது. எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனினும், விற்பனை செய்வது என்ற முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கடைசியாக கணக்கிடப்பட்ட ரியல் எஸ்டேட் மதிப்பின்படி, மேற்கண்ட மூன்று கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.50,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை உள்ளது. இருப்பினும் விற்பனை நடைமுறைகளை துவக்குவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் இவற்றின் சந்தை மதிப்பு இதை விட 5 மடங்கு அல்லது அதற்கு மேல் இருக்க வாய்ப்புகள் உள்ளன, என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எல்ஐசி நிறுவனத்தின் சொத்து மேலாண்மை பிரிவு மற்றும் நிதிச் சேவைகள் துறையின் சார்பில் மேற்கண்ட விற்பனை திட்டம் தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒன்றிய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை செயல்படுகிறது. ஒன்றிய அரசின் பங்குகள் விற்பனை, பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முன்னதாக, இதன் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, காப்பீட்டுத்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. தனியார் காப்பீட்டுத் துறைகள் எவ்வளவு போட்டி போட்டாலும், எல்ஐசி வர்த்தக அளவை நெருங்க முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த 2023-24 நிதியாண்டில் எல்ஐசி நிறுவனம் நிகர லாபமாக ரூ.40,676 கோடியை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.36,397 கோடியாக இருந்தது. லாபம் அதிகரிப்பை தொடர்ந்து, கடந்த நிதியாண்டுக்காக பங்குதாரர்களுக்கு ரூ.6 வீதம் டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. இந்த நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் இந்த முடிவு பங்குதாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இதற்குமுன்பும் எல்ஐசி நிறுவனம் தனது சொத்துக்களை விற்க திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்ப்புகள், வழக்குகள் காரணமாக அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஒன்றியத்தில் பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பொதுத்துறை நிறுவன சொத்துக்கள் விற்பனை மீண்டும் வேகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், சொத்துக்களை விற்கும் திட்டம் எதுவும் இல்லை என எல்ஐசி நிறுவனம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது.

* காப்பீட்டு துறையில் ஆதிக்கம் செலுத்தும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியிடம், பாதுகாப்புத்துறை, ரயில்வேக்கு அடுத்த படியாக அதிக சொத்துக்கள், நிலங்கள் இருக்கின்றன.
* வழிகாட்டு மதிப்பின்படி இவற்றின் சொத்து மதிப்பு குறைவாக இருந்தாலும், சந்தை மதிப்பு அதைவிட சுமார் 5 மடங்கு அதிகம்.

* எல்ஐசி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்புரூ.51.21 லட்சம் கோடி
* கடந்த ஆண்டில் திரட்டிய நிகர லாபம் ரூ.40,676 கோடி

* விற்பனை செய்ய தனி நிறுவனம்?
எல்ஐசி நிறுவனம் தனது பிரதான சொத்துக்களை விற்பனை செய்வதற்கு பிரத்யேக நிறுவனம் ஒன்றை நிறுவ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாகவே சொத்து விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

* விரைந்து தீர்வு காண தனி கோர்ட்
எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன சொத்து விற்பனையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய எல்ஐசி நிறுவன சொத்து விற்பனைக்கு எதிராகவும் வழக்குகள் போடப்படலாம். இருப்பினும் இதற்கு சட்ட ரீதியாக விரைந்து தீர்வுகாண, இத்தகைய வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு கோர்ட் மூலம் வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பொதுத்துறை நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

The post டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள எல்ஐசியின் சொத்துக்களை விற்று ரூ.60,000 கோடி திரட்ட மோடி அரசு திட்டம்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Modi government ,LIC ,Delhi, ,Mumbai ,Union government ,Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க-வினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு