×

ரீல்ஸ் எடுத்த போது விபரீதம் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்து பெண் பலி

மும்பை: ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண் ரிவர்சில் ஓட்டிய கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரை ஓட்டிய பெண் பலியானார். மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள ஹனுமான் நகரைச் சேர்ந்தவர் ஸ்வேதா தீபக் சர்வாசே (23). இவர் தனது நண்பர் சிவராஜ் சஞ்சய் முலே (25) என்பவருடன் சாம்பாஜி நகரில் சுலிபஞ்சன் தத்தாதாம் கோயில் அருகே உள்ள மலைப்பகுதிக்குச் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணியளவில் சென்றார். அங்கு, பள்ளத்தாக்கை நோக்கி காரை ரிவசர்சில் அந்தப் பெண் ஓட்டியதை, சிவராஜ் சஞ்சய் ரீல்ஸ் போடுவதற்காக வீடியோ எடுத்தார்.

கார் பள்ளத்தாக்கை நெருங்கியபோது தான் ஆபத்தை உணர்ந்த சிவராஜ், உடனே கூச்சலிட்டார். ஆனால், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஸ்வேதா அழுத்தியதால், கார் வேகமாகச் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்தது. தகவல் அறிந்ததும் சுல்தாபாத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பள்ளத்தில் விழுந்த கார் சுக்கு நூறாக நசுங்கிக் கிடந்தது. ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் எடுக்கும் ஆசை விபரீதத்தில் முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ரீல்ஸ் எடுத்த போது விபரீதம் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Shweta Deepak Sarvase ,Hanuman Nagar ,Sambhaji Nagar, Maharashtra ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்