×
Saravana Stores

வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவரில் பொலிவிழந்த விலங்கு பறவை ஓவியங்கள்: புதிதாக வரைய பார்வையாளர்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவரில் ெபாலிவிழந்த விலங்குகள், பறவைகள் ஓவியத்தை முற்றிலும் அகற்றிவிட்டு புதிதாக வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்ைக வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவரில் விலங்குகளின் ஓவியம் பொலிவிழந்து காணப்படுகிறது.

எனவே, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து செல்லும் பார்வையாளர்கள் கூறியதாவது: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையை ஒட்டியபடி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த இரண்டு சாலை ஓரத்திலும் கடந்த 1979ம் ஆண்டு சக்கை கற்களால் சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இதில், சாலையில் செல்லும் வாகனங்கள் சுற்று சுவர் மீது லேசாக மோதினாலே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விடுகிறது. மேலும், கனமழை பெய்யும் நேரங்களில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்று சுவர் மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்து விடுகிறது.

இதனால், விலங்குகள் அவ்வப்போது தப்பி சென்று விடுகின்றனர். அப்போது, அதே கற்களால் சுற்று சுவரை கட்டுகின்றனர். மேலும், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில் சாலை ஓரங்களில் உள்ள சுற்று சுவரில் வரையப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியங்கள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. இதனை பூங்கா நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு சக்கை கற்களால் அமைக்கப்பட்டுள்ள சுற்று சுவரை முற்றிலும் அகற்றிவிட்டு கான்கிரீட் சுற்று சுவர் அமைக்க வேண்டும். மேலும், பொலிவிழந்துள்ள ஓவியங்களை அழித்துவிட்டு புதிதாக வரைய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவரில் பொலிவிழந்த விலங்கு பறவை ஓவியங்கள்: புதிதாக வரைய பார்வையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Vandalur ,Zoo ,Anna Zoo ,Vandalur, Chengalpattu district ,
× RELATED தனியார் பல்கலை விடுதியின் 6வது...