×

6 மாதம் வாடகை தராததால் வீட்டின் படிகட்டு உடைப்பு; வாடகைதாரர் வெளியே வர முடியாமல் தவிப்பு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வானவில் நகர் பகுதியில் சொந்தமான வீடு உள்ளது. இந்த, வீட்டின் மேல் மாடியில் வேணுகோபால் என்பவர் தனது மனைவி லீலா மற்றும் 2 குழந்தைகள் மற்றும் தம்பி பாபு, இவரது மகள் மகாலட்சுமி ஆகியோருடன் வசித்து வருகிறார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வேணுகோபால் வீட்டிலே இருந்து வருகிறார். இதனால், வேணுகோபாலின் தம்பி பாபு, முறையாக வாடகை செலுத்தாததால் குடியிருப்பை காலி செய்யுமாறு, வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் பாபு, வழக்கறிஞர் உதவியுடன் வீட்டின் உரிமையாளர்கள் பேசி கால அவகாசம் வாங்கிய நிலையில், கடந்த 6 மாத காலமாக வாடகை செலுத்தவில்லை. இதனால், பலமுறை வீட்டினை காலி செய்யுமாறு கூறியும், வீட்டினை காலி செய்ய மறுத்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கட்டுமான உதவியாளர் 10 நபர்களுடன், வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை உடைத்து எடுத்து இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையின் அவசர உதவியான 100 அழைத்து புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வீட்டிலுள்ள நபர்களை பாதுகாப்பாக அழைத்துவர முயன்றனர்.

அப்போது, வீட்டைவிட்டு வெளியேற குடும்பத்தினர் மறுத்து வருவதால், காவல்துறையினிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில், பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியை கவனிக்க அதிகளவு பணம் செலவழித்த நிலையில் விரைவாக தந்து விடுவதாக கூறிய நிலையில், இதுபோன்ற அராஜக செயல் ஈடுபட்டு தற்போது குடிநீர் கூட குடிக்க இயலாத நிலையில் வீட்டில் முடங்கி கிடப்பதாகவும், பள்ளி செல்லும் மாணவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சீனிவாசனை தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 6 மாதம் வாடகை தராததால் வீட்டின் படிகட்டு உடைப்பு; வாடகைதாரர் வெளியே வர முடியாமல் தவிப்பு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Srinivasan ,Kanchipuram ,Chantadi Temple Street ,Vanavil Nagar ,Kanchipuram District Collector's Office ,Venugopal ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு...