×

பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: ஏரி போல் காட்சியளித்த அரசுப்பள்ளி வளாகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கன மழையால், மாறிய அரசுப் பள்ளி வளாகம் ஏரி போல் காட்சியளித்தது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் குறிப்பாக பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மதுரவாயல், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது.

பூந்தமல்லியில் 11 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதில், குறிப்பாக பூந்தமல்லி ட்ரங்கு சாலை காட்டுப்பாக்கம் அருகே சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல், பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏரி போல தண்ணீர் தேங்கி நின்று காட்சி அளித்தது. இந்த பள்ளியில் பூந்தமல்லி, மாங்காடு, மலையம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பெய்த கன மழை காரணமாக அரசு ஆண்கள் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து ஏரி போல் காணப்பட்டது.

இந்த மழைநீர் வடிய இரண்டு மூன்று நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. இந்த மழை நீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மழை விட்டு வெயில் காய்ந்த பிறகு தானாக மழை நீர் செல்லும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதும் தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு மழைக்கும் அறிஞர் அண்ணா அரசு பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. இனி வரும் நாட்களில் இங்கு மழைநீர் தேங்காத வகையில் நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: ஏரி போல் காட்சியளித்த அரசுப்பள்ளி வளாகம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,POONTHAMALLI ,Chennai ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் – திருவள்ளூர் இடையே...