×

பாலியல் தொழில் நடப்பதாக வடபழனியில் தனியார் விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ஆயுதப்படை காவலர் கைது

சென்னை: விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரி என தனியார் விடுதி உரிமையாளரிடம் உங்கள் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய ஆயுதப்படை காவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை வடபழனி 100 அடி சாலையில் ‘ஜிஞ்சர்’ என்ற பெயரில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 31ம் தேதி வந்த நபர் ஒருவர், தன்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரி என்றும், உங்கள் விடுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எனக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. எனவே தங்கும் விடுதியை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையையும் அந்த நபர் சோதனை செய்தார். பிறகு எனக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் தர வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளரிடம் கூறுங்கள் என்று ஊழியர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து தங்கும் விடுதி ஊழியர்கள் நடந்த சம்பவத்தை உரிமையாளரிடம் கூறினர். அதன்படி உரிமையாளர் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 31ம் தேதி வந்த நபர் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிக இல்லை என்றும், ஆயுதப்படை காவலர் பவஷா என தெரியவந்தது. இவர் கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து, பணியாற்றி வருவதும், கடந்த 2022ம் ஆண்டு திருவான்மியூர் பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில், துணை கமிஷனரின் தனிப்படை அதிகாரி என கூறி ரூ.5 ஆயிரம் பணம் பறித்தது தெரியவந்தது. இதுபோல் பல இடங்களில் ஸ்பா மற்றும் தங்கு விடுதிகளில் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரி என மிரட்டி பணம் பறித்து வந்ததும் விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து ஆயுதப்படை காவலர் பவஷாவை வடபழனி போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலியல் தொழில் நடப்பதாக வடபழனியில் தனியார் விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ஆயுதப்படை காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadpalani ,Chennai ,Prevention of Prostitution Unit ,Vadpalani, Chennai ,Dinakaran ,
× RELATED சினிமா புரொடக்ஷன் அசிஸ்டன்ட் மீது தாக்குதல்