×
Saravana Stores

கலசபாக்கம் அருகே அர்னேசா அம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கலசபாக்கம், ஜூன் 18: கலசபாக்கம் அருகே நடைபெற்ற ஸ்ரீ அர்னேசா அம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கலசப்பாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு ஊராட்சியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் முழுமையாக நிரம்பின. கிராமம் தாழ்வான பகுதியில் இருந்ததால் ஏரி நீர் நிரம்பி கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமி அர்னேசா தன் தந்தையுடன் ஏரிக்கு சென்று இருந்தார். அப்போது ஏரிக்கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதை கண்ட சிறுமி தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கிராம மக்களை பாதுகாத்திட கரையின் மீது படுத்து ஏரியின் தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி கிராம மக்களை பாதுகாத்தார். கிராம மக்களை பாதுகாத்த அர்னேசா வை இப்பகுதி மக்கள் தெய்வமாக ஏரிக்கரையில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். நன்றி கடன் செலுத்தும் விதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கலிட்டு கரகம் எடுத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கரகம் எடுத்து பொங்கலிட்டு கூழ் வார்க்கும் நிகழ்ச்சி 6ம் தேதி தொடங்கியது. நேற்று ஏரிக்கரையில் அமைந்துள்ள அர்னேசா அம்மனுக்கு கரகம் ஜோடித்து பொங்கலிட்டு திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அர்னேசா அம்மன் முத்தாலம்மன் மாரியம்மன் கரகம் திருவீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மறுதினம் புதன்கிழமை காப்பு கலைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மூன்று கரகங்களில் இருந்த எலுமிச்சம் பழம், நாணயங்கள் ஏலம் விடுவார்கள். தொழில் செழித்திட வாழ்வில் வளம் பெற ஏராளமானவர்கள் ஏலத்தில் பங்கேற்று எலுமிச்சம் பழம் மற்றும் நாணயத்தை ஏலம் எடுப்பதில் போட்டி போடுவர். எலுமிச்சம் பழம் மற்றும் நாணயம் பல ஆயிரம் தொகைக்கு ஏலம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலசபாக்கம் அருகே அர்னேசா அம்மன் கோயில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Arnesa Amman temple festival ,Kalasapakkam ,Sri Arnesa Amman temple festival ,South Pallipatt panchayat ,
× RELATED கலசப்பாக்கத்தில் 17 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!!