×
Saravana Stores

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது

திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நாளை (19ம் தேதி) தொடங்குகிறது. அதையொட்டி, வரும் 28ம் தேதி வரை குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை கணக்குகளை தணிக்கை செய்வதற்கான, வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஆண்டுதோறும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) முதல் வரும் 28ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. ஜமாபந்தி நடைபெறும் தாலுகாக்களில், வருவாய் உள்வட்டங்கள் வாரியாக, வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள், குறைகளுக்கு தீர்வு காணப்படும். அதன்படி, வெம்பாக்கம் தாலுகாவில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நாளை முதல் வரும் 25ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. எனவே, குறிப்பிட்ட நாட்களில் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளிக்கலாம். நிறைவு நாளன்று விவசாயிகள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தண்டராம்பட்டு தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் வரும் 21ம் தேதி வரையில் ஜமாபந்தி நடக்கிறது.

மேலும், திருவண்ணாமலை தாலுகாவில் திருவண்ணாமலை ஆர்டிஓ தலைமையில் வரும் 27ஆம் தேதி வரையிலும், போளூர் தாலுகாவில் ஆரணி ஆர்டிஓ தலைமையில் வரும் 25ம் தேதி வரையிலும், வந்தவாசி தாலுகாவில் செய்யாறு உதவி கலெக்டர் தலைமையில் வரும் 28ம் தேதி வரையிலும், கலசபாக்கம் தாலுகாவில் மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் தலைமையில் வரும் 21ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறும். மேலும், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கலெக்டரின் உதவியாளர் (நிலம்) தலைமையில் வரும் 21ம் தேதி வரையிலும், சேத்துப்பட்டு தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில் வரும் 24ம் தேதி வரையும், செய்யாறு தாலுகாவில் காலால் உதவி ஆணையர் தலைமையில் வரும் 28ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறும். அதேபோல், செங்கம் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல்ல அலுவலர் தலைமையில் வரும் 25ம் தேதி வரையிலும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் வரும் 20ம் தேதி வரையிலும், ஆரணி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வரும் 25ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறும். மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெறுவதால், திங்கள் கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆகியவை நாைள முதல் வரும் 28ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,Jamabandi ,Dinakaran ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக...