×

பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் உற்சாகம்

சென்னை: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதென முடிவு செய்துள்ளது, காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ரேபரேலி மக்களவை உறுப்பினராக நீடிப்பதெனவும் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதெனவும் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்த முடிவு, லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை மோடி நடத்தினார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தனர்.

இந்நிலையில் வடக்கையும், தெற்கையும் இணைக்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் பொருத்தமானதாகும். நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தி சிக்மகளூர் மக்களவை தொகுதியில் இருந்தும், சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் இருந்தும் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்துள்ளனர். இந்திய மக்கள் அனைவரையும் சமமாக கருதுகிற தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து அகில இந்திய காங்கிரஸ் எடுத்த முடிவு அரசியல் ரீதியாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். இந்திய மக்களை இரு தலைவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Congress ,Chennai ,Tamil Nadu ,President ,Selvaperunthagai ,Wayanad ,Lok Sabha ,Rae Bareli ,
× RELATED 82 வயது கார்கேவை அவமதிக்க வேண்டிய...