×

ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசிய சோமண்ணா நம்பகத்தன்மையை இழந்து விட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை சிக்கல் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்று ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார். நீதியின் பக்கம் நிற்க வேண்டிய ஒன்றிய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தான் மேகதாது அணை திட்டம் ஆகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அது குறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும்?. ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கர்நாடகத்தை சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போதே மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர். ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சராக சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக செயல்பட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக பேச்சு நடத்த ஒன்றிய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது.

The post ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசிய சோமண்ணா நம்பகத்தன்மையை இழந்து விட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Somanna ,Karnataka ,Union Minister ,Ramdas ,CHENNAI ,Union Minister of State for Water Resources V. Somanna ,Union Government ,Governments of Tamil Nadu ,Puduvai ,Meghadatu Dam ,Ramadoss ,Dinakaran ,
× RELATED இரு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை...