- கிளம்பாக்கம்
- பேருந்து நிலைய பேருந்துகள்
- நடுவுரோட்
- முதிரவஞ்சேரி
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
- நதுரோதி
- சென்னை வண்டலூர்
- கிளம்பக்கம் பேருந்து நிலையம் பேருந்துகள்
- தின மலர்
கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டிலேயே பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுவதால், எதிரும் புதிருமாக பயணிகள் சாலையை கடந்து வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது என பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் செல்கின்றன.
இந்நிலையில், தென் மாவட்டங்களுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி வரும் அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் வரும் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையின் நடுவில் நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.இதனால் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று உள்ளூர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் செல்வதற்காக குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் ஆபத்தான முறையில் ஜிஎஸ்டி சாலையை எதிரும், புதிருமாக கடக்கின்றனர்.
இதில் ஜிஎஸ்டி சாலையின் இரு புறங்களிலும் அதிவேகமாக வரும் வாகனங்கள் சாலையை கடக்கும் பொது மக்களை பார்த்து திடீர் பிரேக் போடுகின்றனர். இதனால் அடுத்தடுத்து வரும் வாகனங்கள் முட்டி மோதி நிற்கின்றன. இரவு நேரங்களில் அப்பகுதியில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் எந்த நேரத்தில் பெரும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பயணிகள் சாலையை கடந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலையில் தடுப்புகளை அகற்றிவிட்டு சிசிடிவி கேமராக்களுடன் சிக்னல் அமைத்து பாதுகாப்பு பணியில் போக்குவரத்து துறை போலீசாரை அமர்த்தி அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அப்பகுதியில் எந்த ஒரு பேருந்துகளையும் நிறுத்தி பயணிகளை இறக்காமல் 300 மீட்டர் அருகிலேயே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னல் வளைவில் சென்று மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகள்: சாலையை கடக்க முடியாமல் பயணிகள் அவதி appeared first on Dinakaran.