சென்னை: அரசு அறிவித்ததை விட அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கதிரவன் கூறியதாவது: அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலை வகுப்பு மாணவர்களும், மாலையில் சுயநிதி மாணவர்களும் என இரண்டு தொகுதிகள் அரசு ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணம், காலை வகுப்புகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரமாக இருந்தாலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில், குறிப்பாக, நாக் அந்தஸ்து’ பெற்ற கல்லூரிகளில் மாணவர்களிடம், உண்மையான தொகையை விட, ஐந்து முதல், ஆறு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அரசு கண்காணிக்க வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடவேண்டும். மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், அரசு உத்தரவை மீறி செயல்படும் கல்லூரிகளுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்த வேண்டும். அந்த நிறுவனங்களின் முதல்வர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் காந்திராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 163 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 10 சதவீத கல்லூரிகள் மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டண கட்டமைப்பை கடைபிடிக்கின்றன. எனவே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணக் கட்டுப்பாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளாக அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். எங்களுக்கு புகார்கள் வந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டண ஒழுங்குமுறை குழுவை நியமிப்பது குறித்து இயக்குனரகம் கோரிக்கையை பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்கும் என கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.