சேலம்: சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 2 மூதாட்டிகள், இளம்பெண்ணிடம் கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை வாலிபரை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், 75 வயதான மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். போதையில் இருந்த அந்த வாலிபர், மூதாட்டியை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்ததுடன், பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அந்த வாலிபரை தள்ளி விட்டு கூச்சல் போட்டுள்ளார். அப்போது வாலிபர், மூதாட்டியை தாக்கி உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர், அதே பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர். சிறிது நேரத்தில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த வாலிபர், குடிசை வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 65 வயதான மற்றொரு மூதாட்டியை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மூதாட்டி கூச்சல் போட்ட நிலையில், வீட்டிற்குள் இருந்து அவரது மருமகள் வெளியே ஓடி வந்துள்ளார்.
இதை கண்ட அந்த வாலிபர், மூதாட்டியை விட்டு விட்டு அவரது மருமகளை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த வாலிபரை தள்ளி விட்டு தாக்கியுள்ளார். இதனிடையே, சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின் மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர், போதை வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஜல்லிக்காட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிக்குமார் (24) என்பதும், போதையில் மூதாட்டி உள்பட 3 பேரையும் கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 2 மூதாட்டிகள் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: போதை வாலிபருக்கு தர்மஅடி appeared first on Dinakaran.