சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக கூறிய மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வார பயிற்சிக்காக லண்டன் சென்ற மாணவர்கள் பயிற்சி முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பினர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இணைந்து லண்டனில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றிருப்பது பயனுள்ள வகையில் இருந்ததாக கூறிய மாணவர்கள் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். லண்டனில் பயிற்சி பெற்றதன் மூலம் பல அனுபவங்களை கற்று கொண்டதாகவும் இதே மாதிரியான வாய்ப்பு இன்னும் நிறைய பேருக்கு அரசு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மாணவர்கள் கேட்டு கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.