×

மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடம் 44.6 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் வரை உயர்மட்ட பாதையாக அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கனவே மேம்பால ரயில் பாதை இருப்பதால் அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆதம்பாக்கம் மேம்பால ரயில் பாதைக்கும் மேல் மெட்ரோ ரயிலுக்கான உயர் மட்ட பாதை அமைப்பதற்காக 20 மீட்டர் உயரமான பிரமாண்ட தூண்களும் அதில் பாலம் அமைக்கும் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘முற்கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதால், 2ம் கட்ட மெட்ேரா ரயில் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் பரங்கிமலை, ஆதம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டுகள், நடைமேம்பாலங்கள் அமைக்கப்படும்.இந்த வழித்தடத்தில் மொத்த பணிகளும் 2026ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு தூண்களில் விளம்பர பலகை
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கி ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு வரை உள்ள மெட்ரோ ரயில் தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த முத்ரா வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லரை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடுசெய்ய உதவுகிறது. ​மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Adamappakkam ,Madhavaram ,Choshinganallur ,Chennai ,Rail ,Airport ,Wimco Nagar ,Central ,Parangimalai… ,Cholinganallur Metro ,
× RELATED மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்...