×

நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகளுக்கான உத்வேக ஸ்தலம் வளாகம் திறப்பு: ஒருதலைப்பட்சமான முடிவு என காங். தாக்கு

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் மாற்றப்பட்டு ஒரே இடத்தில் வைக்கப்பட்ட ‘உத்வேக ஸ்தலம்’ வளாகம் திறக்கப்பட்டது. மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களின் சிலைகள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் எண் 7க்கு எதிரே வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மகாத்மா காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சமீபத்தில் அகற்றப்பட்டு அவை ஒரே இடத்தில் ‘உத்வேக ஸ்தலம்’ என பெயரிடப்பட்ட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் வெவ்வேறு இடங்களில் சிலைகளை பார்க்க சிரமமாக இருப்பதாகவும், ஒரே இடத்தில் இருந்தால் அவற்றை பார்த்து அஞ்சலி செலுத்த வசதியாக இருக்கும் என மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. உத்வேக ஸ்தல வளாகத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்த அறிக்கையில், ‘‘இன்று தலைவர்களின் சிலைகள் மாற்றி வைக்கப்பட்ட வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இது ஆளும் பாஜ அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு. மக்களவை இணையதளத்தின்படி, உருவப்படங்கள் மற்றும் சிலைகள் தொடர்பான நாடாளுமன்ற குழு கடந்த 2018 டிசம்பர் 18 அன்று கூடியது.

அதன்பின், துணை சபாநாயகர் இல்லாததால், 17வது மக்களவையில் (2019-2024) அக்குழு மறுசீரமைக்கப்படவில்லை. யாரிடமும் கருத்து கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடும் இடத்திற்கு அடுத்தபடியாக அமைதியான மற்றும் ஜனநாயக போராட்டங்களின் பாரம்பரிய இடமாக காந்தி,  அம்பேத்கர் சிலைகள் இருக்கக் கூடாது என்பதே இதன் ஒரே நோக்கம்’’ என கூறி உள்ளார்.

* சபாநாயகர் மறுப்பு
சிலை இடமாற்றம் பாஜவின் ஒருதலைப்பட்சமான முடிவு என்கிற குற்றச்சாட்டு குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பேட்டியில், ‘‘சிலைகள் இடமாற்றமானது அழகுபடுத்தும் பணியின் ஒரு அங்கமாகும். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் அவ்வப்போது பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முடிவுகள் மக்களவை சபாநாயகர் அலுவலகத்தின் வரம்பிற்குள் உள்ளது. மேலும், சிலைகள் எதுவும் அகற்றப்படவில்லை, அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகளுக்கான உத்வேக ஸ்தலம் வளாகம் திறப்பு: ஒருதலைப்பட்சமான முடிவு என காங். தாக்கு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Gandhi ,Ambedkar ,Utveka Sthalam ,Mahatma Gandhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி,...