×

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி விருந்து கொடுத்து முதல்வர் ‘ஐஸ்’: நட்சத்திர ஓட்டலில் அரசு அதிகாரிகளுக்கும் ‘டிரீட்’

புதுச்சேரி: பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் முதல்வர் ரங்கசாமி நட்சத்திர ஓட்டலில் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு நேற்று திடீர் விருந்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ தேஜ கூட்டணி ஆட்சியமைத்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சூழலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சியின் பாஜ வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தார். இது கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் அடுத்த தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தசூழலில், பாஜ எம்எல்ஏக்கள், ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் நேற்றுமுன்தினம் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாநில தலைவர் செல்வகணபதியை அழைத்து, தேஜ கூட்டணி ஆட்சி நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும், பாஜ ஆதரவு எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் சட்டமன்ற கூட்டத்தில், அரசுக்கு போர்க்கொடி உயர்த்துவோம் என தெரிவித்தனர். பாஜ எம்எல்ஏக்களின் இந்த முடிவால் என.ஆர் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ஓட்டலில் முதல்வர் ரங்கசாமி, அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு நேற்று மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜ எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சபாநாயகர் செல்வம், பாஜ ஆதரவு எம்எல்ஏ அங்காளன், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. தலைமை செயலர் சரத்சவுகான், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாஜ எம்எல்ஏக்கள் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் நடந்த மதிய விருந்து அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் விருந்து வைத்த ரங்கசாமி, ஓட்டலுக்கு வந்த எம்எல்ஏ, அமைச்சர்களிடம் எதுவுமே பேசவில்லையாம். எதற்காக இந்த விருந்து என்று கூட தெரியாமல், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஒருவரையொருவர் பார்த்து முழித்துள்ளனர். எனினும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு அவரவர் காரில் ஏறி பறந்துள்ளனர்.

இதுகுறித்து விருந்தில் கலந்து கொண்ட எம்எல்ஏக்களிடம் கேட்டபோது, ‘முதல்வர் அவ்வப்போது விருந்து வைப்பது வழக்கம். ஆனால் அதற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் இந்த முறை காரணமே இல்லாமல் அழைத்தார், நாங்களும் ஏதோ முக்கியமான ஆலோசனையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் முதல்வர் எதுவும் பேசவில்லை, இதனால் விருந்துக்கு வந்த எல்லோரும் ஒரு குழப்பத்துடன் புறப்பட்டுவிட்டோம்’ என்றனர்.

The post புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி விருந்து கொடுத்து முதல்வர் ‘ஐஸ்’: நட்சத்திர ஓட்டலில் அரசு அதிகாரிகளுக்கும் ‘டிரீட்’ appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP MLAs ,Chief Minister ,Rangasamy ,Nakshatra ,NR Congress ,Baja Teja alliance ,
× RELATED புதுச்சேரி அரசுக்கு எதிராக பாஜ...