×

இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல ‘ஒன்றிணைவோம் வாருங்கள்’ அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் தற்போது ஒன்றிணைய வேண்டும் என வி.கே.சசிகலா அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது குறித்தான முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தன்னுடைய தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்திற்கு விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே ஆட்கள் வந்திருந்தனர்.

குறிப்பாக, பாஜ கூட்டணியில் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் ஐக்கியமாகி இருப்பதால் அவர்களுடைய ஆதரவாளர்கள் ஒருவர் கூட சசிகலாவை சந்திக்க வரவில்லை.இதுமட்டுமல்லாது, சசிகலாவின் சகோதரரான திவாகரன் அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் அமைச்சர்களை சசிகலாவை ஆதரிக்குமாறு ஒருங்கிணைப்பு வேலைகளை மறைமுகமாக செய்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. அதேபோல், திவாகரன் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணி, செங்கோட்டையன், ஆர்.காமராஜ் ஆகியோரிடம் மறைமுகமாக பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

சசிகலா சகோதரர் திவாகரனுடன் சில முன்னாள் அமைச்சர்கள் இணைந்து அரசியல் செய்ததாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும், முக்குலத்தோர் முன்னாள் அமைச்சர்களை தனக்கு எதிராக ஒருங்கிணைப்பு செய்வதையும் எடப்பாடி பழனிசாமி அறிந்து கண்டித்துள்ளார். இந்நிலையில் தான் சசிகலா தன்னுடைய தொண்டர்களை திடீரென சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களுக்கு சசிகலா அளித்த பேட்டி:

ஒருசில சுயநலவாதிகளால் தற்போது அதிமுக தொடர் சரிவுகளை காண்கிறது. இதை நானும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்ஜிஆரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதிமுகவில் சாதி கிடையாது. ஜெயலலிதா சாதி பார்ப்பவர் கிடையாது. அப்படி பார்த்திருந்தால் நான் எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்திருக்க மாடேன்.
தற்போது நல்ல நேரம் வந்து விட்டது. அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பலமாக இருக்கிறேன்.

என்னுடைய என்ட்ரீ ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். விரைவில் பட்டிதொட்டியெல்லாம் நான் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். அதிமுக நான்காக பிரிந்து இருக்கலாம். தற்போது அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்த நேரத்தில் சரி இல்லாதது. கொடநாடு வழக்கு எப்போது முடிவடையுதோ அப்போதுதான் உலகத்திற்கு உண்மை தெரியவரும்.

* நான் பலமாக இருக்கிறேன். என்னுடைய என்ட்ரீ ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள்.

The post இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல ‘ஒன்றிணைவோம் வாருங்கள்’ அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,AIADMK ,CHENNAI ,VK ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED சொல்லிட்டாங்க…