×

மாணவர்களுக்கு, சமூகநீதிக்கு, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: மாணவர்களுக்கும், சமூகநீதிக்கும், ஏழைகளுக்கும் எதிராக இருக்கும் நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேலும் பல வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு ‘நீட்’ தடை போடுகிறது.

தேசிய தேர்வு முகமை மேல் தவறில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசியிருந்தாலும், நடந்து வரும் நிகழ்வுகள் அதற்கு மாறான தோற்றத்தையே அளிக்கின்றன. தேர்வு கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாக பல கோடி ரூபாய்க்கான காசோலைகள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

இந்த சதி செயலில் பள்ளி முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அமைப்பு ரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. அதேபோல், நீட் ஒழிப்பு போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம்.

இனியும் பொறுத்தலாகாது. தகுதிக்கான அளவுகோல் என பொய்வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்பத் திரும்ப நிரூபணமாகிவிட்டது.‘மாணவர்களுக்கு எதிரான – சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான’ இந்த நீட் முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

* முதல்வர் பக்ரீத் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி: நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றை பின்பற்றி வாழும் இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர்.

அந்த இன்பத்தை எய்திட இசுலாமிய பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள். நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மாணவர்களுக்கு, சமூகநீதிக்கு, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Union Govt ,Chennai ,M. K. Stalin ,Union Government ,Twitter ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...