×

நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அதற்கான கெடு நாளையுடன் முடிகிறது.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிவில் இரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராகுல்காந்தி ராஜினாமா செய்தாக வேண்டி உள்ளது. இந்த இரண்டில் எதை அவர் ராஜினாமா செய்வார் எனவும், அதில் போட்டியிடப் போவது யார் என்பதும் பேசுபொருளாகி வருகிறது. இதற்கிடையே, தற்போது ராகுல் தனது வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தயாராவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் அரசியலுக்கு வருவதற்கும் முன்பாக தாய் சோனியா காந்திக்காக பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். அவர் உ.பி-யில் ஒவ்வொரு முறை தேர்தல்களிலும் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், பிரியங்கா தரப்பில் அமைதியே பதிலாக இருந்தது. நடந்து முடிந்த தேர்தலிலும் பிரியங்காவின் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.இந்த நிலையில் அவர் தனது சகோதரர் ராகுலின் தொகுதியான வயநாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ராகுல்காந்தி எந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் என்பது சஸ்பென்சாக உள்ளது.

அந்த சஸ்பென்சுக்கும் நாளையுடன் (தேர்தல் முடிவு வெளியான 14 நாட்களுக்குள் இரண்டு தொகுதியில் வென்றவர், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்) முடிகிறது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாளையுடன் (ஜூன் 17) 14 நாட்கள் முடிவதால், ராகுல்காந்தி தனது நிலைபாட்டை இன்றோ, நாளையோ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாளையுடன் கெடு முடியும் நிலையில் ராகுல் தக்கவைத்துக் கொள்வது வயநாடா, ரேபரேலியா? இடைத்தேர்தலில் பிரியங்காவை களமிறக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Rhaparelia ,Priyanka ,New Delhi ,Rahul Gandhi ,Congress ,Lok Sabha ,Kerala ,Wayanad ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்