×

திண்டுக்கல் மாவாட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 49,889 பேருக்கு ரூ.56.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்: கலெக்டர் தகவல்

திண்டுக்கல் ஜூன் 16: திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் 49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:தமிழக அரசு, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கென தனி வாரியம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் இதர 16 நல வாரியங்கள் என மொத்தம் 18 நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

18 நலவாரியம் என்னென்ன?
அதன்படி, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம், சலவை தொழிலாளர்கள் நலவாரியம், முடிதிருத்துவோர் நலவாரியம், தையல் தொழிலாளர்கள் நலவாரியம், கைவினை தொழிலாளர்கள் நலவாரியம், பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம், காலணி, தோல் பொருட்கள் தொழிலாளர்கள் நலவாரியம் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் நல வாரியம், ஓவியர் நலவாரியம், பொற்கொல்லர் நலவாரியம், மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியம், வீட்டு பணியாளர்கள் நலவாரியம், விசைத்தறி நெசவாளர்கள் நலவாரியம், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம், சமையல் தொழிலாளர்கள் நலவாரியம், தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 18 நலவாரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

உதவித்தொகை உயர்த்திவழங்க உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, இளங்கலை தொழில்நுட்ப படிப்பு, முதுகலை தொழில்நுட்ப படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டணம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கிற்கு உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரணம் நிவாணரம், விபத்து மரணம், விபத்து ஊனம் நிவாரண தொகை, ஓய்வூதியம், முடக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.56.92 கோடிநலத்திட்ட உதவி
மேலும், பெண் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தல், பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் மீது உதவித்தொகை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் தொழிலாளர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில், வாரியம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 1,05,471 நபர்களும், உடலுழைப்பு மற்றும் இதர 16 வாரியங்களில் 1,30,903 நபர்களும், ஆட்டோ ஓட்டுநர்கள் வாரியத்தில் 8,398 நபர்களும் என மொத்தம் 2,44,772 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் பதிவை புதுப்பித்து பதிவு நடப்பில் உள்ள தொழிலாளர்களில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 68,677 நபர்களும், உடலுழைப்பு மற்றும் இதர 16 வாரியங்களில் 25,234 தொழிலாளர்களும், ஆட்டோ ஓட்டுநர்கள் வாரியத்தில் 4,359 தொழிலாளர்களும் என மொத்தம் 98,270 தொழிலாளர்கள் உள்ளனர். அதில் கடந்த 2021 ஆண்டு முதல் ஜூன் 8ம் தேதி வரை மட்டும் பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் 50,779 தொழிலாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியங்கள் சார்பில் கல்வி உதவித்தொகை 35,277 நபர்களுக்கு ரூ.5.21 கோடி மதிப்பிலும், திருமண உதவித்தொகை 602 நபர்களுக்கு ரூ.74.77 லட்சம் மதிப்பிலும், கண் கண்ணாடி 12 நபர்களுக்கு ரூ.6,000 மதிப்பிலும், இயற்கை மரணம் நிவாரண தொகை 645 நபர்களுக்கு ரூ.2.12 கோடி மதிப்பிலும், விபத்து மரணம் நிவாரண தொகை 18 நபர்களுக்கு ரூ.18.30 லட்சம் மதிப்பிலும், பணியிட விபத்து மரணம் நிவாரண தொகை 5 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலும், குடும்ப ஓய்வூதியம் 28 நபர்களுக்கு ரூ.47,000 மதிப்பிலும், மாதாந்திர ஓய்வூதியம் 13,302 நபர்களுக்கு ரூ.47.59 கோடி மதிப்பிலும் என மொத்தம் 49,889 தொழிலாளர்களுக்கு ரூ.56.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவாட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 49,889 பேருக்கு ரூ.56.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Workers' Welfare Board ,Dindigul district ,Dindigul ,Workers' Welfare Boards ,Collector ,Bougodi ,Government of Tamil Nadu ,Welfare Board of Workers ,district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய்...