×

மருத்துவ கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்க ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியுடன் பன்னோக்கு மருத்துவமனை இணைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மருத்துவக்கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்க ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியுடன் பன்னோக்கு மருத்துவமனையை இணைக்கும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4வது பட்டமளிப்பு விழா நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

விழா மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் உயர்சிறப்பு மருத்துவமனை இருக்கிறது. அக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பெறவோ, சிறப்பு சிகிச்சை பொதுமக்களுக்கு அளிக்கவோ முடியும். ஆனால் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் அந்த வாய்ப்பு இல்லை. ஆகையால் முதல்வரின் உத்தரவின்படி, பொது நலம் சார்ந்த 6 பாடப்பிரிவுகள், பொது அறுவை சிகிச்சை 6 இடங்கள், எலும்பு அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மயக்கவியல் மருத்துவம், அவசர மருத்துவம் என 31 புதிய இடங்கள் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பல மருத்துவ வசதிகள் இந்த மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இணைந்து இரு மருத்துவமனைகளும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற காரணத்தினால் இரு மருத்துவமனைகளையும் இணைத்தால் என்ன என்ற யோசனை தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இரு அமைப்புகளையும் இணைத்தால் மருத்துவக் கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

தற்போது முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இரு அமைப்புகளையும் ஒன்றாக இணைப்பதற்குரிய அறிவிப்புகள் முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அரவிந்த், துணை முதல்வர் புஷ்பா, மருத்துவமனை கண்காணிப்பாளர் திருவேங்கட செந்தில்குமார், மருத்துவ தொடர்பு அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டனர்.

The post மருத்துவ கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்க ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியுடன் பன்னோக்கு மருத்துவமனை இணைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pannoku Hospital ,Omanturar Medical College ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Omanturar Government Medical College Hospital ,Minister of People's Welfare ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயத்தால்...