×

2024-25 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீட்டு சந்தை மதிப்பு இலக்கு ரூ.15 லட்சம் கோடியாக நிர்ணயம்: ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையம் தகவல்

ரூ.சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் தீபக் மோகந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் ஏராளமான தனியார் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் இணைந்துள்ளன. இதற்கு முன் 60 வயதுடன் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு முடிந்து விடும். தற்போது 75 வயது வரை முதலீடு செய்ய முடியும்.

கடந்த ஜூன் 8ம் தேதி வரை 1.5 கோடி பேர் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளனர். அதில் 93 லட்சம் பேர் அரசு துறைகளிலும், 56 லட்சம் பேர் கார்பரேட் நிறுவனங்களில் இருந்தும் இணைந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 2500 கார்பரேட் நிறுவனங்கள் இணைந்துள்ளன. கடந்த மே 14ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீட்டு சந்தை மதிப்பு ₹12 கோடியாக இருந்தது. இந்த ஓய்வூதிய திட்டம் மிகவும் எளிமையானது, குறைந்த தொகையும் முதலீடு செய்யலாம், மேலும் அதிக லாபம் ஈட்டித்தரக்கூடியது. மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை, ஆண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் திட்டங்களும் உள்ளன.

தேசிய ஓய்வூதிய அமைப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் உள்ளது. டென்மார்க், நெதர்லாந்து, ஐஸ்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இது 200 சதவீதம் வரை உள்ளது. கிராமப்புறங்களில் இந்த ஓய்வூதிய திட்டங்கள் பெரிதும் சென்றடையவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாகவும், வங்கிகள் மூலமாக கிராமங்களுக்கு திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2024-25ம் நிதியாண்டில் முதலீட்டு சந்தை மதிப்பை ₹15 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 லட்சம் புதிய தனியார் நிறுவன பணியாளர்களை திட்டத்திற்குள் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பெண்கள் ஓய்வூதிய திட்டங்களில் இணைவது குறைவாக இருக்கிறது. ஓய்வூதியம் பெண்களுக்கு தான் மிகவும் அவசியம். இந்திய அளவில் 25 சதவீத பெண்கள் மட்டுமே இணைந்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் 33 சதவீத பெண்கள் ஓய்வூதிய திட்டத்தில் இருக்கின்றனர். அடுத்த காலாண்டில் சமச்சீர் வாழ்க்கை சுழற்சி என்ற திட்டம் அறிமுகப்படும். இதில் முதல் சுழற்சியில் அதிக முதலீடு செலுத்தி பின்னர் படிப்படியாக முதலீடுகளை குறைக்கலாம். இந்த திட்டத்தில் காப்பீட்டாளருக்கு அதிக பயன் கிடைக்கும்.

The post 2024-25 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீட்டு சந்தை மதிப்பு இலக்கு ரூ.15 லட்சம் கோடியாக நிர்ணயம்: ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pension Fund Regulatory Commission ,Pension Fund Regulatory and Development Commission ,Deepak Mohanty ,Anna Road, Chennai ,
× RELATED விஷச் சாராய வழக்கில் 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்