×

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வரும் ஜூலை 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமலாகும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதற்காக அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நடைமுறையில் இருக்கும் இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா – 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா – 2023, பாரதிய சாக்‌ஷியா – 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களை மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களில் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களுக்கான புதிய மசோதாகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. இந்த பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே நடைமுறையில் இருக்கும் 3 சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு சார்பில் பணியாளர் நலத்துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது. இந்த சட்டங்கள் குறித்த புரிதலை அரசுப்பணியில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங்களில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த தகவல்களைச் சேர்க்க வேண்டும். அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,EU government ,
× RELATED ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய...