×

தியாகத்திற்கு ஒரு திருநாள்…!

பக்ரீத் பண்டிகை 17-6-2024

ஹஜ் எனும் புனிதப் பயணமும் அதன் வழிபாடுகளும் மாபெரும் ஓர் இறைத்தூதரின் மகத்தான தியாகங்களை நினைவூட்டும் செயல்களாகும். அந்தப் புனிதப் பயணத்தின் நிறைவாகக் கொண்டாடப்படுவதுதான் “தியாகத் திருநாள்.” அந்த மாபெரும் இறைத்தூதர் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள்தாம். அவர் கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிலுள்ள ‘உர்’ எனும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே ஞானக் குழந்தையாகத் திகழ்ந்தார். சிலை வழிபாட்டில் ஊறித் திளைத்த குடும்பம். அவருடைய தந்தை ஆஸர் ஊரின் தலைமை மதகுரு. காணிக்கை எனும் பெயரில் மக்கள் ஆஸரின் காலடியில் செல்வத்தைக் குவித்தார்கள்.

ஆனால், ஞானக்குழந்தை இப்ராஹீமின் இதயமோ இந்தப் பேரண்டம் முழுவதையும் படைத்த ஏகப் பரம்பொருளாம் இறைவனைப் பற்றி அறியவே துடித்தது.மனிதர்கள் தம் கைகளால் உருவாக்கும் உருவங்கள் எப்படி இறைவனாக முடியும்? இடம், வெளி, உருவம் ஆகியவற்றுக்குள் இறைவனை அடக்க முடியுமா என்று சிந்தித்துக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.தந்தைக்கும் மகனுக்கும் சித்தாந்தப் போர் மூண்டது. “இப்ராஹீமே, குடும்பப் பாரம்பர்ய பழக்க வழக்கங்களை நீ எதிர்ப்பதாக இருந்தால் இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை, கல்லால் அடித்துக் கொல்வேன்” என்றார் தந்தை. “தந்தையே உங்கள் மீது அமைதி நிலவட்டும். தங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திப்பேன்” என்று சொல்லியபடி வீட்டை விட்டு வெளியேறினார்.

அன்று தொடங்கியது அவருடைய தியாக வாழ்வு…! “படைத்த ஏக இறைவனையே வழிபடுங்கள்… அவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்” எனும் சத்திய முழக்கத்தை அவர் முழங்கியதால் தந்தை எதிர்த்தார், குடும்பம் எதிர்த்தது, சமுதாயம் எதிர்த்தது, ஏன் நாடாளும் மன்னரின் கோபத்திற்கும் ஆளானார். ஆயினும் தம் கொள்கையில் ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றார்.“மாபெரும் நெருப்புக்குண்டம் ஒன்றைத் தயார் செய்து இப்ராஹீமை அதில் வீசி எறியுங்கள்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்ராஹீம் தீக்குண்டத்தில் வீசப்பட்டார். இறைவனின் அருளால் காப்பாற்றப்பட்டார்.இந்த வேதனைகளும் சோதனைகளும் போதாது என்று அடுத்து ஒரு பெரும் சோதனை அவருக்குக் காத்திருந்தது.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும்கூட அவருக்குக் குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அவருடைய முதிய வயதில் ‘இஸ்மாயீல்’ எனும் மகனை அருளினான் இறைவன். மகனின் மழலைச் சொல் கேட்டுக் கவலைகளை எல்லாம் மறந்திருந்த இப்ராஹீமின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தம் ஆருயிர் மகனை இறைவனுக் காக அறுத்துப் பலியிடுவது போல் கனவு கண்டார். அதையும் நிறை வேற்றத் துணிந்தார். ஆம், இறைவனுக்காகத்தம் மகனையே பலியிட முன்வந்தார். இறைவன் அதைத் தடுத்து அவரை ஆட்கொண்டான்.பிறகு, இறைவனின் கட்டளைக்கு ஏற்பத் தம் மனைவியையும் மகனையும் ஆள்நடமாட்டமே இல்லாத மக்கா நகரில் தனியே விட்டது, ஓரிறைக் கொள்கையைப் பரப்புவதற்காக ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றியது,

மக்காவில் தம் மகன் இஸ்மாலுடன் இணைந்து கஅபா ஆலயத்தைக் கட்டியது, அந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு கொடுத்தது என இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்காகவே – இறைப் பணிக்காகவே செலவிட்டார்.அவரைப் பற்றியும் அவருடைய அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு குறித்தும் இறைவன் தன் திருமறையில் பல வசனங்களில் குறிப்பிட்டுள்ளான். குறிப்பாக, அனைத்துச் சோதனை களிலும் அவர் வெற்றி பெற்றதாக இறைவனே அறிவித்தான். “இப்ராஹீமை அவருடைய இறைவன் சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். அவர் அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார்.” (குர்ஆன் 2:124)இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர் களின் தூய திருவாழ்வை, பெருவாழ்வை நினைவுகூர்வதற்காகத்தான் தியாகத் திருநாளை உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

– சிராஜுல்ஹஸன்

 

The post தியாகத்திற்கு ஒரு திருநாள்…! appeared first on Dinakaran.

Tags : Bakrit Festival ,Hajj ,Sacrifice ,Prophet ,Ibrahim ,
× RELATED ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு