×

கடனுதவி பெற தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க அழைப்பு

 

ஊட்டி, ஜூன் 15: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர், கல்விக்கடன் பெற தகுதி வாய்ந்த சிறுபான்மை மக்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. திட்டம்-1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறமாயின் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம்-2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்க்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம்-2ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1ன்கீழ் ரூ.20 லட்சம் வரையும், திட்டம் 2ல் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து உாிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீட்டு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி ேகாரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கடனுதவி பெற தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Minorities Economic Development Corporation ,District ,Aruna ,Tamil Nadu Minorities Economic Development ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 19...