×

கோடப்பமந்து கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு

 

ஊட்டி, ஜூன் 15: ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் விழுந்து மார்க்கெட் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்தாரா? தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மத்தியில் கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் ஊட்டி உழவர் சந்தை அருகில் கோடப்பமந்து கால்வாய் அருகே வந்து நின்றார். திடீரென்று அந்த வாலிபர் கோடப்பமந்து கால்வாயில் விழுந்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபரை மீட்ட போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து ஊட்டி பி1 காவல் நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பெயரில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. ஆனால் வட மாநில வாலிபர் போல் தோற்றமுள்ள அவர் ஊட்டி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார் என்பது தெரியவந்தது. ஆனாலும் அவர் குறித்து முழு விவரம் தெரியவில்லை. மேலும் அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோடப்பமந்து கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kodappamandu canal ,Ooty ,Nilgiri district.… ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 19...